உலகத்தை நாம் வாங்கிவிடுவோம் !
டென்மார்க் பொருளாதாரம் தற்போது கொடி கட்டி பறக்குது என்றே கூறவேண்டும். அடுத்த ஆண்டின் வரவு செலவு திட்டத்தினை மிகவும் திறமையாக அட்டவணைப் படுத்தி பேசிய நிதி அமைச்சர் தோ பீட்டர்ஸ்சன், இன்னும் சில வருடங்களில் உலகத்தை நாம் வாங்கி விடலாம் என நகைச்சுவையாக கூறினார்.
அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பெரும்பான்மையான கட்சிகளின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தாலும், முக்கியமாக டெனிஸ் மக்கள் கட்சியின் செல்வாக்கு இந்த முறையும் வரவு செலவு திட்டத்தில் பாவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய விடயமாக வயோதிபர்களுக்குரிய சலுகைகள் மேலதிகமாக இம்முறையும் கூட்டப்படவுள்ளது. புதிதாக தெரிவு செய்யப்பட்ட நகரசபைகள், மாகாணங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு ஒரு முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்தள்ளது.
வேலைவாய்பு
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தில் முதல் தடவை வந்த பொழுது, டென்மார்க் நாட்டில் கிட்டத்தட்ட 200.000 மக்கள் வேலை வாய்புகள் இல்லாமல் இருந்தனர். ஆனால் இன்றோ 200.000 தொழில் வாய்புகள் இருந்தும், அதற்கு ஆட்பற்றாக்குறை இருப்பதை காணமுடிகின்றது. இதில் முக்கியமாக வீடுகள் கட்டும் துறையில் அநேக வேலைகள் உண்டு. எனவே டென்மாhக் நாட்டிற்கு தொழில் சம்பந்தமாக கிழக்கு ஐரோப்பாவில் இருந்து பெருந்தொகையான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். முக்கியமாக போலண்ட் நாட்டில் இருந்து பெருந்தொகையானோர் தொழில் அடிப்படையில் வருகின்றனர்.
இப்படி வருகின்ற தொழிளார்கள், டேனிஸ் தொழிளார்களை விட மிகவும் குறைவான ஊழியத்தில் அமர்த்தப்படுவதாக சில இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் அநேக வேலைவாய்பு இருப்பதால் முக்கியமாக கைதொழில் சம்பந்தமான வேலைகளில் கறுப்பு வேலை ( வரி கட்டாமால் வேலை செய்வது ) குறைந்து விட்டது எனக் கூறப்படுகின்றது. எனவே தொழில் வாய்புகள் பெரும் வாரியாக எல்லா துறையிலும் இருப்பதாக கூறப்படுகின்றது.
கையில் நிறைய காசு
கடந்த இரு வருடங்களில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பெருபான்மையான மக்கள் மத்தியில் பணப்புழக்கம் மிகவும் அதிகரித்துள்ளது.
புதிய வீடுகள் வாங்குவது, புதிய வாகனங்கள் வாங்குவது ஒரு புறம் இருக்க நடுத்தரவர்க்க மக்கள் வெளிநாடுகளில் வீடுகள் வாங்குவது அதிகரித்துள்ளது. இதிலும் முக்கியமாக ஸ்பானியனின் பல கடலோர பகுதிகளில் டேனிஸ் மக்கள் வீடுகளை வாங்குகின்றனர். இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த ஒருவர், எமது வயோதிப காலத்தில் இங்கு வந்து எமது காலத்தை கழிப்பதுடன், விடுமுறைக் காலங்களிலும் வந்து செல்லலாம் எனக் கூறியுள்ளார். இதே போன்று துருக்கி நாடு, பல்கேரியா, போன்ற நாடுகளிலும் வீடுகள் வாங்கப்படுகின்றன.
சில வருடங்களுக்கு முன்னால் பார்ப்போமாயின் மிகவும் வசதி படைத்தவர்கள் மட்டும்தான் இப்படியான வீடுகளை வாங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது.
எமது நிலமை
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் இந்த பணப் புழக்கம் அதிகரித்துள்ளது என்றே கூறவேண்டும். கடந்த வருடங்களில் டென்மார்க்கில் வீடுகள் வாங்கும் தொகை அதிகரித்தள்ளது என்றே சொல்ல வேண்டும் ஆனால் எவ்வளவு வீதத்தில் அதிகரித்தள்ளது என்ற கணிப்புகள் இல்லை. இதை விட தாயகத்தில் சொத்துகள் வாங்கி விடுவதிலும் புலம் பெயர் மக்கள் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது. இது சம்பந்தமான சரியான கணிப்புகள் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அநேக தொழிற்சாலைகளில் தொழில் புரியும் குறிப்பிட்ட வீத எம் மக்கள், தம் வேலை நேரத்தை விட மேலதிகமாக தொழில் புரிவதையும் காணமுடிகின்றது. இந்த மேலதிக தொழிலை தாம் விரும்பியே எம்மவர் செய்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதை விட மேல் கல்வி பயில்கின்ற எம்மவர், மேல் கல்வியை முடித்தவுடன் வேலை வாய்பை பெற்றும், பெறுகின்ற நிலமையிலும் உள்ளனர். எனவே பெருபான்மையான புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், டென்மார்க் பொருளாதார வளர்ச்சியின் பலனை அனுபவிக்கின்றனர்.
உதவிப்பணம் பெறுபவர்கள்
தற்போதைய அரசாங்கத்தின் கடுமையான சமுதாய உதவிச் சட்டங்களினால், நகரசபைகளின் கீழ் உதவிப் பணம் பெறுபவர்களுக்குரிய நிபந்தனைகள் மிகவும் இறுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக உதவிப்பணம் பெறுபவர் ஒருவர் வருடத்துக்கு 300 மணித்தியாலங்கள் ஏதாவது ஒரு வேலை கட்டாயமாக செய்தல் வேண்டும், இல்லையேல் உதவிபணம் நகரசபையால் நிறுத்தப்படும் எனக் கூறப்படுகின்றது. இதே போன்ற நிலைமைகள் முன்பு இருந்தாலும், இவை மிக இறுக்கமாக இருந்ததில்லை. உதவிப்பணம் பெறும் ஒருவர் சுகயீனமாக சில நாட்களுக்கு மேல் வேலைக்கு போகமுடியாத பச்சத்தில், வைத்திய அறிக்கை சமர்பிக்க பட வேண்டும் என கூறப்படுகின்றது. வைத்திய அறிக்கை இல்லாவிட்டால் உதவிப்பணம் நிறுத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது.
அரசாங்கத்தின் கடுமையான சட்டங்கள் மூலம் உதவிப்பணம் பெறும் பெருபான்மையானோரை நிரந்தர வேலை வாய்புக்குள் கொண்டு வருவதுதான் பிரதான நோக்கமாக இருந்தாலும், உதவிப்பணம் பெறும் பெருபான்மையான மக்கள் நிரந்தர வேலை உடனியாக பெறும் வாய்புகள் இல்லை என்றே கூறவேண்டும். எனவே இந்த உதவிப்பணம் பெறுபவர்கள் மத்தியில் ஒர் அளவு பணம் இருந்தாலும், நிரந்தர தொழில்கள் செய்வர்களை விட மிக குறைவாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் மூலம் ஏற்ற, தாழ்வு வருதற்கும், இதனால் மக்களிடையே பெரிய இடைவெளியைத் தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இந்த குறிப்பிட்ட வீத மக்களை ஏழைகள் என்றோ, வசதிகள் இல்லாதவர்கள் என்றோ சொல்லிவிடமுடியாது ஆனால் இவர்களிம் பணப் புழக்கம் குறைவாக இருப்பதற்கு நிறைய வாய்புகள் உண்டு.
ஏற்கனவே உலகத்தில் செல்வந்த நாடாக விளங்கும் டென்மார்க், இந்த பொருளாதார வளாச்சி தொடருமாயின் வரும் காலங்களில் இன்னும் செழிப்பாக வருவதற்கு வாய்பு உண்டு.
ஆய்வாளர். யோசப் அருளையா 08.09.06
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக